Monday, March 23, 2009

உன்னைப் பிரியும் நொடியில்

நிலவு நிறைக்கிறது
தெருவை- மெல்ல
சிணுங்கும் Cell உம்
"செல்லமாய் செல்லம் என்றாயடி"
எனப் பாடிச் செல்கிறது

ஒவ்வொரு முறையும்
உந்தன் அழைப்பாய்
இருக்குமான - எடுக்கையில்
எவர் எவரோ

குரல் எல்லாம்-
எனைநலம் விசாரிக்கும்

கசந்த நெஞ்சின்
அடியிலிருந்து-மெல்லெனவொரு
அழுகுரல் கண்களின்
ஓரம்கண்ணீராய் தெறிக்கும்
நாம் தூர-இருக்கையில்
அருகில் இருந்தோம்
இப்போ-அருகிலிருந்தும்
அண்மையிழந்தோம்...

உந்தன் Soap இன் வாசமும்
தோளின் வளைவில்
சாய்ந்திருக்கையில் நாசி துளைத்த
உந்தன் சென்டின் வாசமும்
மெளனம் பழகியபடி
கைகள் கோர்த்து
வீதிகள் கால்களால்
அளந்த வேளையில்
உந்தன் கண்கள் பேசிய
கவிகளின் ஆழமும்
பாதி பாதியாய் பகிர்ந்து குடித்த-
கோப்பைத் தேநீரின் சுவையும்
இன்னமும் தித்தித்தபடி
எந்தன் நினைவுகளில்...

அன்னை கைவழியுந்தன்
புகைப்படம் என்னை அடைகையில்
என்னில் இல்லை எந்த மாற்றமும்
"உங்களுக்குப் பிடித்தால் சரி" எனும்
மூன்று வார்த்தைகளில்
என்னுலகம்- உன் உலகமானது..

எது உன்னில் என்னைக் கரைத்தது?
உந்தன் பேச்சா- இல்லை
உந்தன் புன்னகையா-இல்லை
என்னை நானாகவே ஏற்றுக் கொண்ட
உந்தன் இயல்பா
சொல்லத் தெரியவில்லை
இன்று வரை.....

தொலைபேசித் தொலைவுகள்
சுருங்கிப் போகுமொருநாளில்-Ottawa
வந்தாய் நீயும்
மறக்க முடியாதநாள்-
மறக்கமுடியாத நேரம்
செல்லமாய்ச் சிணுங்கிய
தொலைபேசியில்
உந்தன் குரல்
"ஒரு நிமிடம் Please
கீழே வர முடியுமா?" என்றது

எந்தன் கண்கள்-என்னையே
நம்ப மறுத்தன-கைகள்
நிறைந்த Red Roses
முகம் மறைக்க-எனைப்பார்த்து
தலைசாய்த்து-நீ
சிரித்துவந்த நொடியில்
என்னை இழந்தேன் நான்

மெல்லச் சிரித்தபடி
"உங்களைப் பார்க்க
வேண்டும் போலிருந்தது அதுதான்...."
என வார்த்தைகள் கிடைக்காமல்
நீயும்- வெட்கத்தை
எங்கே கரைப்பதெனத்
தெரியாமல் நானும்
நிமிடம் தொலைத்தோம்
வெறும் "Bye" யோடு
முடிந்ததெம் சந்திப்பு

இரண்டாவது மூன்றாவது-என
இது உனது ஐந்தாவது சந்திப்பு
உன்னை இன்று
பிரிகையில்-முன்னிலும்
அதிகமாய் வலித்தது மனது
கண்கள் கலங்கிக்
கரை உடைக்கையிலும்
கைகள் இறுக்கி
அழுகை அடக்கினேன்
ஏனெனில் எனக்குத் தெரியும்
எனது அழுகைக்காய்
காத்துக் கொண்டிருக்கிறது
உந்தன் விழிகளின் ஓரமாய்
வெடித்துச் சிதறதயாராய் கண்ணீரென....

எலும்புகள் உடையும் வண்ணம்-
இறுக்க அனைத்து-நெற்றிமுடி
கோதி- ஈரமுத்தம்
பதித்து-கோர்த்தகைகள்
பிரிக்க மனமற்று
பிரிந்து போகிறாய்- நீ
நிலவு நிறைக்கிறது தெருவை-
மெல்லமாய் "செல்லம் என்றாயடி" எனப்
பாடுகிறது cell உம்
ஆனால்-எதுவும் தடுக்கவில்லை
இங்கே வெடித்துச் சிதறும்-உனக்குக்
கேட்காத என் அழுகுரலை

Thursday, March 19, 2009

துணையுடனான வாழ்வு கேள்விகுறியாகையில்

என்னுடன் வேலை செய்பவர் குடிபுக தொடர் மாடி குடிஇருப்புகளில் வீடு தேடுவதாக சொன்னார். அவருக்கு சொந்தமாக வீடு உள்ளதுஅதை என்ன செய்தீர்கள் என கேட்டபோது மிக இலகுவாக எனக்கும் எனது மனைவிக்கும் ஒத்து வரவில்லை அதனால் சிறிய இடைவெளி வேண்டி தான் மட்டும் வேறிடம் தேடுவதாக கூறினார். அவருக்கு இரு பெண் குழந்தைகள். என்ன சொல்வது என்று தெரியாமல் மெதுவாக "எனக்கு உனது உணர்வுகள் புரிகின்றன" என சொல்லி விட்டு எழுந்து வந்துவிட்டேன். அந்த இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ன நினைக்கையில் மனதை என்னவோ செய்தது. பல வேளைகளில் முரண்களுடன் வாழ்தல் கடினமானது எனினும் எம்மால் எம்மை சார்ந்தவர் வாழ்வுகளும் பாதிக்க படுகையில் கொஞ்சம் யோசிக்கலாம் என்கின்ற எண்ணம் எழுந்தாலும் யாருடைய தனிப்பட வாழ்வினுடுடான முடிவுகளும் மிகுந்த வலியின் பின்னராக எடுக்கபட்டிக்கும் என்றே தோன்றுகிறது.
எதையும் சரியாக புரிந்துகொள்கின்ற குழந்தைகள் எனின் இந்த மாற்றத்தை இலகுவாக ஏறறுகொள்வார்கள். பன்னிரண்டு வயது குழந்தைகளின் வாழ்விலிருந்து தந்தை பிரிந்து போதலும் வார இறுதியில் முகம் காட்டிபோவதும் எத்துணை வலியை தந்துபோதல் கூடும்.
மனதின் ஆழங்களில் பதிந்து போக முடியாத வார்த்தைகளின் விரியமும் இன்னமும் புரியாத வாழ்வின் ரகசியங்களும் காத்துபோகக்கூடும் எமக்கான உறவுகளின் நேசத்தை...


Wednesday, March 18, 2009

அம்மா

இன்று வேலை அதிகம் இல்லை, சும்மா இருப்பது மன சன்யலத்தை இன்னமும் அதிகரிப்பதாக இருக்கிறது. அம்மாவின் துன்பம் பார்கமுடியாததாக உள்ளது. எல்லா வேளைகளிலும் கைகொடுபதில்லை கடவுள் நம்பிக்கை. என்ன வாழ்விது என்னும் கசப்பில் இன்னமும் எத்தனை நாட்க்களை தான் தொலைப்பது

வாழ்தல்

எழுதி முடிபடாத

கணங்களாய் கழிகிறது

வாழ்வு... இதில்

எதை எழுதி

கிழிப்பது

முதலாவது பதிவு

இது எனது முதலாவது பதிவு . நீண்ட நாட்கள் ஆக பதிவிட வேண்டும் என்ற எனது ஆசை இன்று நிறைவேறுகிறது.